கோவை:''காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான்,'' என, கோவையில் தி.மு.க., பயிலரங்கில் எம்.பி., ராசா பேசினார்.கோவையில் 'திராவிட மாடல் தான் தேசிய மாடல்' என்ற தலைப்பில் தி.மு.க., பயிலரங்கம் நேற்று நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.செந்தில் பாலாஜி பேசுகையில், ''மனிதனை மனிதனாக நடத்துவது திராவிட மாடல். சில பேர் குஜராத் மாடல் என்கின்றனர். ஆனால் அங்கு மின்வெட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதேநேரம் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கி வருவது திராவிட மாடல். பல்வேறு மாநில முதல்வர்களும் நம் முதல்வரின் ஆட்சியை பாராட்டி வருகின்றனர்,'' என்றார்.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் எம்.பி., ராசா பேசியதாவது:தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது. பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம். ஈ.வெ.ரா.,வின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல; பெண்ணியம், சாதி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் பங்கு ஆகியவையும் தான். கடந்த, 1996ம் ஆண்டில் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கினார். இது திராவிட ஆட்சியில் நடந்தது.காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான். எதை கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பார்கள் என்பதை அறிந்து பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, மேயர் கல்பனா, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணன், ராமச்சந்திரன், சேனாதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.