திருத்தணி : மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்வதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில் இருந்து, எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா வழியாக, சோளிங் கர் மாநில நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும், தனியார் பஸ்கள், ஒரு அரசு டவுன் பஸ், தனியார் பள்ளி, கல்லுாரி பஸ்கள், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள்
இந்த மாநில நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.இந்த நிலையில், எஸ்.அக்ரஹாரம் அருகே, சில விவசாயிகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, விவசாயம் செய்கின்றனர். மேலும் சிலர், சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருவதால், 30 அடி அகலத்திற்கு மேல் இருந்த சாலை, தற்போது, 15 அடியாக குறுகியுள்ளது. இதனால், வாகனங்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றன.எனவே நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கே.ஜி.கண்டிகையில் இருந்து, எஸ்.அக்ரஹாரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை விரைவில் வருவாய் துறையினர் உதவியுடன் சர்வே செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும்' என்றார்.