புன்செய்புளியம்பட்டி : சமூக வலைதள வதந்திகளால், வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட எல்லையான, புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இதில், ௩,௦௦௦க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஹிந்தி மொழி பேசும் வட மாநில வாலிபர்கள், குழந்தைகளை கடத்துவதாக கடந்த சில நாட்களாக, தகவல் வெளியாகி வருகிறது. வட மாநிலத்தவர்களை தாக்கி காயப்படுத்தும், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன.
கோவை மாவட்டம், நீலிபாளையம், செல்லப்பம் பாளையம், மீனாம்பளையம், திருப்பூர் மாவட்டம், பேர நாயக்கன்புதுார், ஆலத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஸ்பின்னிங் மில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நுாற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், புன்செய்புளியம்பட்டியில் தங்கி பணியாற்றுகின்றனர்.
இந்த தொழிலாளர்கள் டீ கடை, ஓட்டல், மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளுக்கு, காலை மற்றும் மாலையில் செல்வது வழக்கம். குழந்தைகள் கடத்துபவராக கருதி, கிராம மக்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என, அச்சத்தில் உள்ளனர். இதனால் ஊருக்குள் நடமாட அச்சமாக உள்ளதாக கூறி புலம்புகின்றனர்.