மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருமா... 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது | கடலூர் செய்திகள் | Dinamalar
மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருமா... 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது
Added : மே 16, 2022 | |
Advertisement
 
Latest district News


கடலுார் : கடலுார் முதுநகரில் ரூ. 100 கோடியில் அனைத்து வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் விரைவில் பயன்பாட்டிற்கு வருமா என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் நல்லவாடு முதல் சிதம்பரம் தாண்டவராய சோழகன்பேட்டை வரையில், 49 மீனவ கிராமங்கள் உள்ளன. 250 விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள், கட்டுமரங்கள் உட்பட 2,500 படகுகள் உள்ளன.

50 ஆயிரம் மீனவர்களில் 24 ஆயிரம் பேர் நேரடியாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.மாவட்டத்தில் கடலுார் முதுநகர், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் இரு இடங்களில் விசைப்படகு மீன்பிடி துறைமுகங்களும், முடசல் ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்., திட்டு, பேட்டோடை உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மீன்பிடி தளங்களும் உள்ளன.இப்பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் 25 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு, உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் போதிய இட வசதி இன்மை மற்றும் நகருக்குள் மீன் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.முக்கியமாக, கடலுார் துறைமுகத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்து துவங்குவதால் அதற்கு இடையூறு ஏற்படாத வகையிலும், முதுநகர் மீன்வளத்துறை அலுவலகம் அருகே உப்பனாற்று கரையில் இருந்த பழைய மீன்பிடி துறைமுகத்தை சீரமைத்து, விரிவுபடுத்த மீன்பிடி துறைமுகத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மீனவர் கட்டமைப்பு வளர்ச்சி நிதி (எப்.ஐ.டி.எப்) 100 கோடி ரூபாய் மதிப்பில், விரிவாக்க பணி 2020 ஜனவரியில் துவங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 'ப' வடிவில் மீன் இறங்கு தளம், படகு அணையும் தளம், மீன் ஏல கூடங்கள், சோலார் வசதியுடன் மீன் உலர் களம், மீனவர்கள் ஓய்வு அறை, ஐஸ் லேன், டீசல் பங்க், வலை பின்னும் கூடங்கள், நீர்தேக்கத் தொட்டி, படகுகள் பழுது பார்க்கும் இடம், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் கடந்த ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. அதையடுத்து, பணிகள் துவங்கியது.கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ம் தேதி, மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி புதிய மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, 2022ம் ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

அதையடுத்து, பணிகள் துரித வேகத்தில் நடந்தது. 90 சதவீதத்திற்குமேல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஒயரிங் உள்ளிட்ட சிறு சிறு பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, முடிக்கப்பட்ட மீன் உலர் களம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அந்த இடங்களில் புதர் மண்டியுள்ளது. சமூக விரோதிகளின் புகலிடமாகவும் உள்ளது. எனவே, இனியும் தாமதப்படுத்தாமல் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் ஏற்கனவே முடிக்கப்பட்டு, பயன்பாடில்லாமல் கிடக்கும் கட்டடங்கள் வீணாகி, பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கொரோனா காரணமாக பணிகள் இடையில் தொய்வு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் திறக்க வேண்டிய நிலையில், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு மாதம் கூடுதலாக அவகாசம் கேட்டுள்ளர்.எனவே, விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்கின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X