காவலாளி கொலை
மதுரை: வாடிப்பட்டி முருகேசன் 65. கோச்சடையில் உள்ள தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்தின் ஒர்க் ஷாப்பில் 4 ஆண்டுகளாக காவலாளியாக இருந்தார். நேற்று அதிகாலை தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் உள்ள ஒர்க் ஷாப்பில் வாகனம் ஒன்றில் இருந்து 4 பேட்டரிகள் திருடுபோயிருந்தன. அங்கு திருடியவர்கள் இங்கு திருட வந்தபோது முருகேசன் தடுத்ததால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என எஸ்.எஸ். காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்ஸ்பெக்டரிடம் திருட்டு
மதுரை: தெப்பக்குளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி. மதுரை ஆயுதபடை மண்டபத்தில் இவரது வீட்டு விசேஷத்தின்போது 5 பவுன் மதிப்புள்ள தங்க கைச்செயின் திருடுபோனது. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.5 லட்சம் திருட்டு
மதுரை: நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ., காலனி நாராயணன் 58. நகைகள்வாங்க ரூ.5 லட்சத்துடன் பஸ்சில் சென்றபோது பணம் திருடப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பள்ளி மாணவர் பலி
சோழவந்தான்: வைரவநத்தம் பதினெட்டு மகன் ஸ்ரீதர் 15, சமயநல்லுார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். அதே பகுதி அழகு மகன் அன்பு 16, அழகுராஜா மகன் சிவகுமார் 22. மூவரும்டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மதுரை சென்று திரும்பினர். நேற்றிரவு நகரி அருகே நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று டூவீலர் மீது மோதி நிற்காமல் சென்றது. ஸ்ரீதர் தலை நசுங்கி இறந்தார். அன்பு கால் முறிந்தது. டூவீலரை ஓட்டிய சிவக்குமார் தலைமறைவானார்.
கேமராவை சேதம்: மூவர் கைது
சோழவந்தான்: இங்குள்ள பள்ளபட்டி ரோட்டில் தென்கரை பாலம் சந்திப்பில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மதுபோதையில் கேமராக்களை உடைத்த முள்ளிப்பள்ளம் ஆதிபாபு 22, ரஞ்சித் 23, மணிபிரவுவை 21, போலீசார் கைது செய்தனர்.
மாணவி தற்கொலை
திருநகர்: சுந்தர்நகர் ராஜேஷ் கண்ணன் மகள் தீபிகா 16. ராஜேஷ் கண்ணா இறந்து விட்டார். தீபிகா திருப்பரங்குன்றத்திலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்தார். அடிக்கடி வயிற்று வலி என கூறிய தீபிகா நேற்று பள்ளி செல்லவில்லை. தாயார் அருந்ததி, சகோதரி வேலைக்கு சென்றனர். மற்றொரு சகோதரி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவர் கதவை திறந்து பார்த்த போது மின்விசிறியில் தீபிகா துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். போலீஸ் விசாரணையில் தீபிகாவிற்கு பிப்ரவரியில் கருமாத்தூர் கோயிலில் திருமணம் நடந்தது தெரிந்தது. ஆனால் மறுநாள் முதல் தீபிகா தாய் வீட்டிற்கு வந்து பள்ளியில் படித்ததும் தெரிந்தது.