கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே, பச்சமலை ஊராட்சியில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள், கூடமலையில் உள்ள, 'யூனியன் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.
இதில், முதியவர்கள் மாதந்தோறும் வங்கிக்கு சென்று, முதியோர் உதவித்தொகை பெற்றுச் செல்கின்றனர். அதன்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு, பச்சமலையை சேர்ந்த, 40 பேர் உள்பட, 60க்கும் மேற்பட்டோர், முதியோர் உதவித்தொகை பெற வங்கியில் காத்திருந்தனர். ஆனால், மாலை, 4:00 மணிக்குத் தான் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதனால், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து, வங்கி மேலாளர் கோவிந்தராஜ் கூறுகையில், ''இன்று (நேற்று), வங்கியில் பி.எஸ்.என்.எல்., இணையதளம் வேலை செய்யாததால், பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டது. உதவித் தொகை பெறுபவர்கள், ஏ.டி.எம்., கார்டு வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தியும், அவர்கள் வாங்குவதற்கு மறுக்கின்றனர். ஏ.டி.எம்., கார்டு வாங்கிக்கொண்டால் அவர்கள் எந்த நேரத்திலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். தாமதம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.