ஆத்துார்:ஆத்துார் அரசு கல்லுாரி மகளிர் விடுதியில் தங்கி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி, 'ராகிங்' கொடுமையால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்த புகாரின் படி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், எஸ்.சி.,- எஸ்.டி., மற்றும் பி.சி.,- எம்.பி.சி., மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன.
எஸ்.சி.,- எஸ்.டி., மாணவியர் விடுதியில், 61 பேர் தங்கி படிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அருகே, உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த, 18 வயது மாணவி, பி.எஸ்சி., கணினி அறிவியல் படிக்கிறார். இவர் விடுதியில் தங்கியுள்ளார்.
கடந்த, 14ம் தேதி கல்லுாரிக்கு சென்றுவிட்டு விடுதிக்கு வந்த மாணவி, மயக்கம் வருவதாக கூறி, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர், கல்லுாரி விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவியர், 'ராகிங்' செய்ததால், 'குன்றுமணி' எனும் விஷ விதை சாப்பிட்டதாக கூறியுள்ளார். மாணவி ஆபத்தான நிலையில் இருந்ததால் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தலைவாசல் தாசில்தார் வரதராஜன், ஆத்துார் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஜெயந்தி மற்றும் ஆத்துார் ரூரல் போலீசார், கல்லுாரி விடுதி மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அனைத்து மாணவ, மாணவியர் மத்தியில் நேற்று, கல்லுாரி முதல்வர் (பொ) செல்வராஜ் பேசுகையில், ''கல்லுாரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரை, 'ராகிங்' செய்வது கண்டறிந்தால் கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்தார்.வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் கூறியதாவது:அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள முதலாம் ஆண்டு மாணவி, 'ராகிங்' செய்ததால், தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். விடுதி மற்றும் கல்லுாரியில் விசாரித்தபோது, மொபைல்போன் பயன்
படுத்த வேண்டாம் என, ஆசிரியர்கள் மற்றும் விடுதியில் உள்ள காப்பாளர், மூன்றாம் ஆண்டு மாணவியர் எச்சரிக்கை செய்துள்ளனர்.'ராகிங்' போன்ற செயல்கள் நடந்துள்ளதா என, விசாரணை செய்யப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற மாணவி, வேறு கல்லுாரியில் படிக்கும் மாணவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறுவதால், அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினர்.