கூடுவாஞ்சேரி:மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் பிரமாண்ட நுாலகம் அமைய உள்ளது.நுாலகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கணினிகளுடன் கூடிய 'வைபை' வசதி ஏற்படுத்தப்பட்டு, அறிவுசார் பூங்கா மையம் துவங்க உள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக, நகராட்சிக்கென புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.அறிவுசார் பூங்காநந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து, தேவையான வசதிகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக குடிநீர் உட்பட அடிப்படை தேவைகள், மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான பணிகள், அதிக அளவில் நடந்து வருகின்றன.இந்நிலையில், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளில் அறிவுசார் மையம் ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் அறிவுசார் பூங்கா துவங்கப்பட உள்ளது.அதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டனர்.கூடுவாஞ்சேரி நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இரு நாட்களுக்கு முன், ஆராய்ச்சி நகரமைப்பு அலுவலர் செந்தில்குமார் செழியன் முன்னிலையில் வருவாய் துறையினர் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். பூங்கா 1.51 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அறிவுசார் பூங்கா, பெரிய அளவு நுாலகம் போல் செயல்படும். அரசு தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.'டெண்டர்'நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறியதாவது:கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், அறிவுசார் பூங்கா அமைக்கப்படுகிறது.நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதில் இளைஞர்கள், அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.மேலும், போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகமும், நுாலகத்தில் இடம்பெறும்.தொடுதிரை ஒளியமைப்பு கருவிகளுடன் கூடிய நுாலகம் அமைய உள்ளது. முதல் கட்டமாக நிலம் அளவிடும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்ததும் எவ்வளவு நிலத்தில் இடம் கட்டுவது என முடிவு செய்யப்படும். 1.85 கோடி ரூபாயில் நுாலகம் கட்டுமானம் அமைக்கப்படுகிறது. 'டெண்டர்' விடப்பட்டு, இப்பணிகள் விரைவில் துவங்கி, அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
* நுாலகத்தை சுற்றி பூச்செடிகள்* இருக்கை வசதிகள்* 'வைபை' இணைய வசதியுடன் கூடிய கணினிகள்* 150 பேருக்கு மேல் அமர்ந்து படிக்கும் நுாலகம் * டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சியாளர்களுக்கு அறை* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் அறை* ஒலி, ஒளி மூலம் திரையிடும் வசதி* தினசரி செய்தித்தாள்கள் படிக்கும் வசதி உட்பட பல வசதிகள் செய்யப்பட உள்ளன.
பூங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம், கால்நடை துறைக்கு சொந்தமானது. அங்குள்ள மருத்துவமனை வளாகத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.மருத்துவமனை வளாகம் உபயோகத்திற்கு போக மீதியுள்ள இடத்தில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. நகராட்சி கட்டடம் அமைவது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.