மாமல்லபுரம்:''சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி ஏற்பாடுகளை, மழை சூழல் கருதி விரைந்து முடிக்க வேண்டும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.சர்வதேச ஒலிம்பியாட்டிக் 44வது செஸ் போட்டி, ஜூலை 28 முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, மாமல்லபுரத்தில் நடக்கிறது.போட்டி நடக்கவுள்ள 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், போட்டி ஏற்பாடுகள் தொடர்பான அதிகாரிகளுடன், நேற்று ஆலோசித்தார்.விடுதியின் பிரமாண்ட கூட்டரங்கை, செஸ் விளையாட பயன்படுத்துவது, விளையாட்டு இட கூடுதல் தேவைக்கு, திறந்தவெளி வளாகத்தில் மற்றொரு கூடம் அமைப்பது, வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலர் சரண்சிங் சவுஹானிடம் ஆலோசித்தார்.விளையாட்டு துறை செயலர் அபூர்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்த்குமார், விளையாட்டு விடுதி பகுதி ஏற்பாட்டு பொறுப்பாளர் சங்கர், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி., சுகுணாசிங் ஆகியோரிடம், விபரங்கள் கேட்டறிந்தார்.அவ்வப்போது மழை பெய்யும் சூழலில், ஏற்பாடுகளை முன்னதாக விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.சர்வதேச செஸ் விளையாட்டிற்காக, தமிழக முதல்வர் தலைமையில் குழுக்கள் அமைத்து, இது தொடர்பான பல துறையினரிடம், விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தி உள்ளதாக, நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.