திருப்பூர்: திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் சாயக்கழிவு நீர் கலந்ததால், மீன்கள் செத்து மிதக்கின்றன.
திருப்பூர் மாநகராட்சி - பெரியபாளையம் ஊராட்சி எல்லையில் நஞ்சராயன் குளம், 450 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நல்லாற்றின் கழிமுக துவாரமான நஞ்சராயன்குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது.திருப்பூர் மாநகராட்சி எல்லையில், நல்லாற்றின் கரைகளின் அருகே, சாயப்பட்டறைகளும், சாய ஆலைகளும் உள்ளன. சாதாரண நாட்களில், மாநகராட்சி கழிவுநீர் பாய்கிறது; சிறிய மழை பெய்தாலும், முறைகேடாக, சாயக்கழிவுநீர் திறக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த வாரங்களில் பெய்த மழையின் போது, சாயக்கழிவு திறக்கப்பட்டதால், குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக, மீன்கள் அதிக அளவு செத்து மிதக்கின்றன. இதனால், அப்பகுதியில், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீருடன், சாயக்கழிவு கலப்பதால் மீன்கள் சாகின்றன. அதிகாரிகளை கேட்டால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.ஒவ்வொரு மழை காலத்திலும், இதேபோல், மீன்கள் செத்து மிதந்தால், அவற்றை உண்ணும் பறவைகளும் அழிய நேரிடும்.பறவைகள் சரணாலயமாகும் நஞ்சராயன்குளத்து தண்ணீரை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.