உடுமலை: அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வழியாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையின் பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட, 7,520 ஏக்கருக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.இதில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். பாசனப்பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள, நேற்று முதல், வரும் செப்., 28 வரை, 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு; 55 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில், 2,074 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது.பருவ மழை துவங்கியதும், நீர்வரத்தை பொறுத்து, மீதமுள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.