பந்தலுார்:பந்தலுார் அருகே, மின்சாரம் தாக்கி, பணியாளர் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே, உப்பட்டி துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, மின் பாதை ஆய்வாளர் ஆனந்தராஜ்,49, மின் பராமரிப்பு பணியை மேற்கொண்டு இருந்தார்.அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி, உடல் கருகிய நிலையில் கீழே விழுந்தார். அருகிலிருந்த பணியாளர்கள், இவரை உடனடியாக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:௦0 மணிக்கு சிகிச்சை பலனின்றி, ஆனந்தராஜ் உயிரிழந்தார். உதவி செயற்பொறியாளர் பர்வீஸ் கூறுகையில், ''பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான தகவல் தெரிய வரும். மின்சாரம் தாக்கியது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது,''என்றார்.