உடுமலை:அரசு மற்றும் தனியார் பஸ்களில், இளைஞர்கள், ஆண்கள், முன்புற படிக்கட்டில் நின்று கொண்டு பயணிப்பதால், பெண்கள் ஏறி, இறங்குவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.கிராமப்புறங்களில் இருந்து, உடுமலை நகருக்கு வந்து செல்ல, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே, அரசு பஸ் வசதி உள்ளது.அதிலும், காலை, மாலை நேரங்களில், பள்ளி மாணவ, மாணவியர், அலுவலகம் செல்வோர், பிற பணிக்குச்செல்வோர் என, பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதேநேரம், முக்கிய வழித்தடங்களில் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.அப்போது, இளைஞர்கள், ஆண்கள், முன்புற படிக்கட்டில் நின்று கொள்கின்றனர். இதனால், பெண்கள், மாணவியர் பஸ்சில் ஏறி இறங்கும்போது சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனை கண்டக்டர்களும் கண்டு கொள்வதில்லை.பயணியர் கூறியதாவது:காலை மற்றும் மாலை நேரங்களில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது. ஆண்கள், முன்புற படிக்கட்டில் பயணிப்பதால், அவ்வப்போது பிரச்னை எழுகிறது.குறிப்பிட்ட பஸ்சை தவறவிட்டால், குறித்த நேரத்திற்கு கல்லுாரி, அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்பதால் வேறுவழியின்றி பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது.இதைத்தவிர்க்க, பெண்கள் முன்புற படிக்கட்டு வழியாகவும், ஆண்கள் பின்புற படிக்கட்டு வழியாக ஏறி இறங்க வேண்டும் என்ற முறையை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்.குறிப்பாக, பஸ்சின் முன்புற சீட்களில் ஆண்கள் அமர்வதையும், நிற்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.