பல்லடம்:உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக, பல்லடத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன.பஞ்சு மற்றும் நுால் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் பின்னலாடை துறையினரை போல், பல்லடம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர்களும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது: பஞ்சு பதுக்கலை தடுக்கவும், ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை வேண்டும் என, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பஞ்சு விலையை காரணம் காட்டி, ஓ.இ., மில் சங்கத்தினர் கழிவு பஞ்சு விலையையும் ஏற்றி விட்டனர். கூடுதல் விலைக்கு வாங்க வியாபாரிகள் விரும்பாததால், துணி விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. இப்போது, இரண்டு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான காடா துணி தேக்கமடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.