குன்னுார்:குன்னுாரில், லஞ்சம் வாங்கிய மாநில நெடுஞ்சாலை துறை பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ஆப்பிள் பீ பகுதியை சேர்ந்தவர் நித்யா எவாலின்,38. மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளராக உள்ளார். இவரிடம், கோவையை சேர்ந்த செந்தில்முருகன் என்பவர், குன்னுார் பெட்டட்டியில், புதிதாக வாங்கிய இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க அனுமதி கோரி உள்ளார். இதற்கு நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் நித்யா எவாலின், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக, செந்தில்முருகன், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, ரூபாய் நோட்டுக்களை பெட்டட்டி டீக்கடையில் வைத்து, நித்யா எவாலினிடம் செந்தில் முருகன் வழங்கினார். அப்போது, அங்கிருந்த, லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி, எஸ்.ஐ., ரங்கநாதன் உட்பட போலீசார், நித்யா எவாலினை கையும் களவுமாக பிடித்தனர். அவரை குன்னுார் நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.