கடலுார்:கடலுார் அடுத்த எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவை, கைவிட வேண்டும் என, அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.கடலுாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம், இந்திய கம்யூ., அலுவலகத்தில் நடந்தது. இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார்.கூட்டத்தில், கடலுாரில் புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்றம் செய்யக்கூடாது என்பது, அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பெருமான்மை பொதுமக்கள் கருத்தாக உள்ளதால் அதை ஏற்று, திட்டத்தை கைவிட வேண்டும்.
புதிய கலெக்டர் அலுவலகம் அருகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைத்து விழுப்புரம், பண்ருட்டி, புதுச்சேரி, சென்னை மார்க்க பஸ்கள் பயன்பாட்டிற்கும், பழைய பஸ் நிலையத்தில் கோவை, சேலம், திருச்சி, விருத்தாசலம், சிதம்பரம், சீர்காழி மார்க்க பஸ்கள் பயன்பாட்டிற்கும் பிரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் குளோப், காங்., மாநில செயலாளர் சந்திரசேகர், வி.சி., கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், ம.தி.மு.க., நகர செயலாளர் அய்யப்பன், இந்திய கம்யூ., நகர செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.