கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் வரும் 21ம் தேதி உளுந்துார்பேட்டையில் நடக்கிறது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், உளுந்துார்பேட்டை, களமருதுார் அருணா மேல்நிலைப் பள்ளியில், வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 கலைப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடக்கிறது.
கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்த நடைபெறும் இப்போட்டியில், 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கு பெற கட்டணம் இல்லை.குரலிசை போட்டியில், நாதஸ்வரம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவிகளும், இசையினை முறையாக பயின்ற இளைஞர்களும், இசைப்போட்டியில் தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் ஆகிய கருவிகளைக் கொண்டும் பங்கேற்கலாம்.கிராம நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.ஓவிய போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கும் தலைப்பில் வரைய வேண்டும்.போட்டியாளர்களுக்கு, அதிகபட்சமாக 3 மணி நேரம் அனுமதிக்கப்படும். மாவட்ட அளவில் ஒவ்வொரு கலைப் பிரிவிற்கும் முதல் பரிசாக 6,000 ரூபாய், இரண்டாம் பரிசு 4,000 ரூபாய், மூன்றாம் பரிசு 3,500 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள், மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் விபரங்களுக்கு கலை பண்பாட்டு துறையின் இணையதளம் www.artandculture@tn.gov.in அல்லது தஞ்சாவூர் மண்டலத்தின் தொலைபேசி எண் 04362-232252 ஆகியவைகளை தொடர்பு கொள்ளலாம்.கலைத்திறனில் ஆர்வமிக்க இளைஞர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.