உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு வீடு வீடாகச் சென்று அழைத்தும் மக்கள் வராததும், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் முறைகேடு குறித்து வார்டு உறுப்பினர் புகார் தெரிவித்ததாலும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த நாச்சியார்பேட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தற்காலிக தலைவர் கொடிமணி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., ராதாகிருஷ்ணன், வி.ஏ.ஓ., ஷாலினி, ஊராட்சி தலைவர் சந்தானம் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.வார்டு உறுப்பினர்கள் நிஷாந்தனி, கணேசன், அரங்கசாமி, வட்டார தணிக்கையாளர் பவானி, ஊராட்சி செயலாளர்கள் செல்வராஜ், ரமேஷ் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கு பெண்களும், அந்த ஊராட்சியின் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆனால், காலை 10:00 மணிக்கு துவங்குவதாக இருந்த கூட்டம் பொதுமக்கள் யாரும் வராததால் கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால், ஊராட்சி செயலாளர்கள் ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் வீடு வீடாகச் சென்று கிராம மக்களை கிராம சபைக் கூட்டத்திற்கு அழைத்தனர். 11:30 மணியளவில் ஒரு சிலர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.இறுதியாக கிராம மக்கள் தொகையில் 1200க்கும் மேற்பட்டவர்களில் 29 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
கூட்டத்தில், பங்கேற்றவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலைக்குச் செல்லாதவர்கள் வருகை புரிந்ததாக பதிவேட்டில் பதிவிடுகின்றனர் என குற்றம் சாட்டினர். வார்டு உறுப்பினரான நிஷாந்தினி கூறுகையில், ஒரு வாரம் வேலை செய்கின்றனர், ஆனால் 2, 3 நாட்களுக்கான கூலி மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு வேலைக்கான கூலி சென்று விடுகிறது என கூறியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கூட்டம் 12:10 மணியளவில் முடிவடைந்தது.இந்த கூட்டத்திற்காக சப் இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாச்சியார்பேட்டை ஊராட்சி தலைவராக சந்தானம் சக்திவேல் மற்றும் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், நாச்சியார்பேட்டையில் வார்டு உறுப்பினர்கள் கணேசன், அரங்கநாதன், நிஷாந்தினி ஆகியோர் ஊராட்சி தலைவர் தலைமையில் ஒரு அணியாகவும், வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ரதியா, வள்ளி ஆகியோர் மற்றொரு அணியாகவும் உள்ளனர்.வார்டு உறுப்பினர்கள் இரு பிரிவாக இருப்பதால் துணைத் தலைவர் தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டு தற்போது வரை ஊராட்சி துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.இந்நிலையில், வரும் 25ம் தேதி துணைத் தலைவரை தேர்வு செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் துணைத் தலைவர் தேர்தல் அன்று பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.