பெரம்பூர் : உடைத்த பல்லை சீரமைக்க பணம் கேட்டு, வாலிபரை கடத்தி அடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரம்பூர், முனியப்ப நாயக்கர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பரத், 19. இவர், நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர் வாட்கின்ஸ் தெரு வழியாக சென்றபோது, நால்வர் அவரை மறித்து, அடித்து, ஆட்டோவில் கடத்தி சென்றனர். அதன் பின், வீட்டருகே இறக்கி விட்டு சென்றனர். இது குறித்து, பரத், திரு.வி.க., நகர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், மூன்று மாதத்திற்கு முன், பரத் 'கேட்டரிங்' வேலைக்கு செல்லும் வழியில், பெரம்பூர், பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கமலேஷுடன், 20, தகராறு ஏற்பட்டது.அப்போது, பரத் அடித்ததால், கமலேஷுக்கு பற்கள் உடைந்தன.
இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, கமலேஷ், தன்நண்பர்களான வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்திபன், 21, பெரம்பூரைச் சேர்ந்த திலீப்குமார், 21, மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து, பரத்தை வழி மறித்து தாக்கி, ஆட்டோவில் கடத்தி சென்றனர்.அதன் பின், உடைந்த பற்களை சீரமைக்க பணம் கேட்டு, அவரை மிரட்டி உள்ளனர். பணம் கொடுப்பதாக பரத் உறுதி அளித்த பின், மீண்டும் வீட்டருகே இறக்கி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கமலேஷ் உட்பட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.