தாம்பரம் : ''காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள, 4,000 வீடுகள், மூன்று மாதத்திற்குள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்,'' என்று, அமைச்சர் அன்பரசன் கூறினார்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தாம்பரத்தில் நேற்று மாலை நடந்தது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, இரு மாவட்டங்களில், ஏ.எச்.பி., திட்டங்களின் பட்டியல், பயனாளிகளின் பங்களிப்பு தொகை, பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அப்போது, அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ௪,௦௦௦த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, குடியமர்த்தப்படாமல் உள்ளனர்.மூன்று மாதத்திற்குள், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடுகள் ஒதுக்குவதில் உள்ள சிக்கல்களும் விரைவில் சரிசெய்யப்பட்டு, வீடுகள் ஒதுக்கப்படும்.
முதல்வர் உத்தரவின் படி, ஆண்டிற்கு ௩ லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ள ஏழை, எளியோருக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.சிட்லப்பாக்கம் ஏரியில் இருந்து அகற்றப்பட்ட, 480 பேருக்கு, தைலாவரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.