மேடவாக்கம் : மாடம்பாக்கம் ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 50. இவர் தன் வீட்டின் பின்பக்கத்தில், 4 அடி விட்டமுள்ள, பிளாஸ்டிக் கழிவு நீர்க் குழாயை போட்டு வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, 2:௦௦ மணிக்கு, ஒரு தெருநாய், பிளாஸ்டிக் குழாய்க்குள் தலையை நுழைத்து, மீண்டு வர முடியாமல் மாட்டிக்கொண்டது.
நாயின் கதறல் சத்தம் கேட்ட கண்ணன், மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக கல்யாணராமன் தலைமையிலான நான்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பிளாஸ்டிக் குழாய்க்குள் மாட்டிக்கொண்ட நாயின் தலையை லாவகமாக வெளியே எடுத்தனர். பின்னர் அதற்கு உணவளித்து, பாதுகாப்பாக தெருவில் விட்டனர்.