மாங்காடு : மாங்காடு குமணன்சாவடி சாலையில், மின் மாற்றியை அகற்றாமல், 'ப' வடிவில், மழை நீர் கால்வாய் கட்டப்படும் நடவடிக்கை தொடர்வது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
குன்றத்துாரையும், பூந்தமல்லியையும் இணைக்கும் முக்கிய சாலையாக, குமணன்சாவடி சாலை உள்ளது.இச்சாலையை ஒட்டி, குன்றத்துார் பேரூராட்சி, சிக்கராயபுரம், கொழு மண்ணிவாக்கம், கொல்லச்சேரி ஊராட்சிகள், மாங்காடு பேரூராட்சி, பூந்தமல்லி நகராட்சி உள்ளது.இப்பகுதிகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இதனால், குன்றத்துார்- குமணன்சாவடி சாலையில், 24 மணி நேரமும், போக்குவரத்து இருக்கும்.அதிக போக்குவரத்து உடைய இச்சாலையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில், கால்வாயை இணைப்பு இல்லாமல் கட்டி வருகின்றனர்.அதே நேரத்தில், கால்வாய் கட்டும்போது, சாலையோரத்தில் மின்மாற்றி இருந்தால், அதை அகற்றிவிட்டு, நேராக கட்டுவது என்பது வாடிக்கை. ஆனால், குன்றத்துார்- குமணன்சாவடி சாலையில், மின்மாற்றியை அகற்றாமல், கால்வாயை வளைத்து, சில அடி துாரத்திற்கு, 'ப' வடிவில் கட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
ஏற்கனவே, பாலாண்டேஸ்வரர் கோவில் தெரு சந்திப்பை ஒட்டி, 'ப' வடிவில் கால்வாய் கட்டினர். தற்போது, அதன் அருகே இரண்டாவது முறையாக 'ப' வடிவில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. லேசான மழை பெய்தாலே, குன்றத்துார்- குமணன்சாவடி வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைமை உள்ளதால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் இச்செயல், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள், இவ்விஷயத்தில் தலையிட்டு, மழைநீர் கால்வாயை, நேராக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.