பெண்ணாடம்:பெண்ணாடத்தில் சிவில் இன்ஜினியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், கருங்குழிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ஆனந்தபாபு, 32; கொத்தனார். கூடலுார் சேதுராமன் மகன் உதயராஜா, 28; பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்து, வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார். இவரிடம் ஆனந்தபாபு, பெ.பொன்னேரி புனிதவள்ளி ஆகியோர் வேலை பார்த்தனர்.
புனிதவள்ளிக்கும், பெண்ணாடம் அடுத்த தொளார் இளங்கோவன் மகன் தர்மதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. அந்த பணத்தை, நான் தருகிறேன் என தர்மதுரையிடம் ஆனந்தபாபு கூறினார். ஆனால் பணத்தை தரவில்லை. ஆத்திரமடைந்த தர்மதுரை, 23, இவரது சகோதரர் ராஜதுரை, 21, உட்பட 11 பேர் ஆனந்தபாபுவை தாக்கினர்.
அங்கு வந்த உதயராஜாவையும் தர்மதுரை மற்றும் ஆதரவாளர்கள் சேர்ந்து கட்டை மற்றும் கற்களால் தாக்கிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த உதயராஜா இறந்தார்.இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து தர்மதுரை உட்பட 11 பேரை கைது செய்தனர். குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., சக்திகணேஷ் பரிந்துரையின்படி, ராஜதுரை, தர்மதுரை ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தவிட்டார்.