கள்ளக்குறிச்சி;சின்னசேலம் அருகே பா.ம.க., ஒன்றிய செயலாளரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சக்திவேல், 29; பா.ம.க., சின்னசேலம் ஒன்றிய செயலாளர். பாண்டியன்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் மகன் விஜய். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் சக்திவேல் நேற்று மதியம் 2:00 மணியளவில், பைக்கில் அம்மையகரம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே மொபட்டில் வந்த விஜய் மற்றும் அவரது தந்தை செல்லப்பனும், சக்திவேலை மறித்து, எதற்காக வீடியோ எடுத்துக் கொண்டே வருகிறாய் எனக் கேட்டு, திட்டி, மொபைல் போனை பிடுங்கி உடைத்ததுடன், பீர்பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.படுகாயமடைந்த சக்திவேல் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் விஜய், செல்லப்பன் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.