வேலுார்:சென்னை செல்லும் ரயில்கள், காட்பாடியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்றும், இன்றும் (17, 18) பராமரிப்பு பணிகள் நடப்பதாக ரயில்வே துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி அரக்கோணம் ரயில்வே யார்டு பகுதியில், நேற்று காலை, 10:00 மணிக்கு பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதனால், கனரக தொழில்நுட்ப இயந்திரங்களை கொண்டு, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு - சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். இந்த ரயில்கள் காட்பாடியிலிருந்தே கோவை, பெங்களூருக்கு இயக்கப்படுகிறது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், 17 மற்றும் 18ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை - அரக்கோணம் செல்லும் நான்கு மின்சார ரயில்கள், கடம்பத்துார் வரை இயக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.