திருவண்ணாமலை;சேத்துப்பட்டு அருகே சொத்து தகராறில், தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாஜி ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூரை சேர்ந்தவர் மாஜி ராணுவ வீரர் தேசிங்கு, 70; இவரது மகன் மாஜி ராணுவ வீரர் ஜெகதீசன், 50; திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி கோதண்டராமன், 38, திருமணமாகாதவர்; இவர் தன் தாய் தேவகியுடன் வசித்து வந்தார்.
இவர்களுக்கு சொந்தமான சொத்தை பாகப்பிரிவினை செய்து தர கோதண்டராமன் நீண்ட நாட்களாக கேட்டும், அண்ணன் ஜெகதீசன் மறுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இது தொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன், கோதண்டராமனை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பினார். இது குறித்து, சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று போளூரில் தங்கியிருந்த ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி சிவகாமி, 45, ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.