ஈரோடு:சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, தனியார் கூட்டுறவு சங்கம், 300க்கும் மேற்பட்டோரிடம், 30 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர், குத்தியாலத்துாரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 47; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது தலைமையில், 15க்கும் மேற்பட்டோர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
பின் அவர்கள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு, தனியார் சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம், சத்தியமங்கலத்தில் செயல்பட்டது. இந்நிறுவன மேலாளராக தேவராஜ் உள்ளார். சங்கத்தில் தினசரி, வார சேமிப்பு கணக்கில், 100 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை செலுத்தினால், ஓராண்டுக்கு பிறகு, 6.7 சதவீத வட்டி அல்லது 8.5 சதவீத வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறினார். இதை நம்பி சிறு சேமிப்பு தொகையாக, 200 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை சங்க அலுவலகத்தில் தினசரி செலுத்தி வந்தோம். ஓராண்டு முடிந்ததும் கடந்த, 2021 வரை பணத்தை வட்டியுடன் சேர்த்து வழங்கினர். கடந்த, 2021 ஏப்., முதல் தினமும், 700 ரூபாய் என, தற்போது வரை, 1.48 லட்சம் ரூபாய் நான் செலுத்தியுள்ளேன்.
ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பணத்தை கேட்டு சென்றபோது, பணத்தை தருவதாக காலம் தாழ்த்தினர். தற்போது அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். மொபைல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபோல சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோரிடம், ௩௦ லட்சம் ரூபாய் வரை பெற்று, மோசடி செய்துள்ளனர். மாவட்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.