நூல் விலை உயர்வை கண்டித்து2ம் நாளாக ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
நூல் விலை உயர்வை கண்டித்து2ம் நாளாக ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு
Added : மே 18, 2022 | |
Advertisement
 

ஈரோடு;நுால் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் இரண்டாவது நாளாக, நேற்றும் ஜவுளி நிறுவனங்கள் கடையடைப்பில் ஈடுபட்டன.
ஓராண்டுக்கும் மேலாக நுால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதுபற்றி கவலைப்படாத நிலையில், ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன், பவர்லுாம் கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கம், கனி மார்க்கெட் தினசரி மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கம் மற்றும் அதை சார்ந்த, 25க்கும் மேற்பட்ட சங்கங்கள், நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஈரோட்டில், 4,000க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டன.பஞ்சு கொள்முதலை பரவலாக்கி, பஞ்சு, நுாலை அத்யாவசிய பண்டங்களின் கீழ் கொண்டு வர வேண்டும். பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு, நுாலை ஏற்றுமதி செய்யக்கூடாது. முழு அளவில் வரி இன்றி இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும். இவற்றுக்கான ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். நேற்றைய போராட்டத்தால், 100 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி, வர்த்தகம் பாதித்ததாக, ஜவுளி நிறுவனத்தினர் தெரிவித்தனர். ஜவுளி நிறுவனங்கள் கடையடைப்பால், ஈரோடு கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு பகுதி, ஆர்.கே.வி.சாலை, பல்வேறு இடங்களில் உள்ள பனியன் மார்க்கெட் போன்றவை முற்றிலும் முடங்கி காணப்பட்டது.அந்தியூர், சென்னிமலையில்...அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், இரண்டாவது நாளாக நேற்றும், விசைத்தறி உரிமையாளர்கள், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர், தவிட்டுப்பாளையம், ஆலம்பாளையம், வெள்ளையம்பாளையம் ஆகிய பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நேற்றும் இயங்கவில்லை. இதனால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம், இரண்டு கோடி ரூபாய் தயாரிப்பு பாதித்ததாக, விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் சென்னிமலையிலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நேற்றும் இயங்கவில்லை. இதனால் பல கோடி ரூபாய் துணி தயாரிப்பு பாதித்தது.
கரூரில் ரூ. 100 கோடி இழப்பு

கரூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களான திரைச்சீலை, கையுறை, கால்மிதியடி, போர்வை உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் மற்றும் உள்நாடு என,ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி மேல் ஜவுளி வர்த்தகம் நடக்கிறது. இத்தொழிலில் நேரிடையாக, ஒரு லட்சம் பேரும், மறைமுகமாக, 3 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர்.நுால்விலை உயர்வால் இத்தொழில் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது. அடிக்கடி நுால் விலை உயருவதால், வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு நிர்ணயித்த விலையில் ஜவுளிப் பொருள்களைத் தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுவரை நூல்விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கரூரில் ஜவுளி உற்பத்தியார்கள், நுால் வணிகர்கள், டையிங் தொழிற்சாலை உரிமையாளர்கள், பிரிண்டிங் நிறுவனங்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இரண்டவாது நாளாக நேற்று வேலை நிறுத்தம் ஈடுபட்டனர். இதில், நேற்று மட்டும், 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாளில், 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டள்ளது.இதுகுறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர் ஸ்டீபன்பாபு கூறியதாவது:கடந்த ஓராண்டுக்கு முன் நுால் விலை நான்கு மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 0.5 சதவிகிதம்தான் அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த ஆறு மாதங்களாகவே நாள்தோறும் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இதனால், வெளிநாட்டு ஆர்டர்களை குறித்த விலைக்கு விற்க முடிவதில்லை. மத்திய அரசு அண்மையில்தான் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்தது. இதனால் நுால் விலை குறைந்துவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், இப்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது.எனவே பஞ்சு, நூல் ஏற்றுமதிக்குத் தடைவிதித்து, உடனடியாக செயற்கையான நுால் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும். பருத்தி ஏற்றுமதிக்கும், நுால் ஏற்றுமதிக்கும் வழங்கப்படும் ஏற்றுமதி ஊக்கத்தொகையை மத்திய அரசு நிறுத்தி, உள்நாட்டு பஞ்சாலைகளுக்கு தேவையான பருத்தியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விலை உயர்வை தடுக்காவிட்டால், கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.இவ்வாறு, அவர், கூறினார்.
1.50 லட்சம் பேர் பாதிப்பு
நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நுால் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம், மல்லசமுத்திரம் பகுதிகளில், நேற்று முன்தினம் முதல், வரும், 21 வரை, ஆறு நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. இதனால், 32 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் முடங்கியுள்ளன. இதனால், 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இரண்டாம் நாளான நேற்றும், வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்ந்தது. அதனால், ஜவுளி உற்பத்தி முற்றிலும் தடைபட்டு, நான்கு கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X