சென்னிமலை;வரலாறு காணாத நுால் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தை ஆதரித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும் ஏ.ஐ.டி.யு.சி., விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர் சார்பில், சென்னிமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., விசைத்தறி தொழிலாளர் சங்க வட்டார தலைவர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி., கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி., ஈரோடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க பொது செயலாளர் வரதராஜன், சென்னிமலை வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.