சேலம்:அ.தி.மு.க.,வை பலப்படுத்த, கிராமந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சேலத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, கடந்த, 12ம் தேதி அவரது பிறந்த நாளை, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் கொண்டாடினார். அன்று முதல், தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதில், தி.மு.க., அரசின் ஓராண்டு செயல்பாடு; மாவட்ட வாரியாக ரவுடியிசம்; கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும், தி.மு.க.,வினரின் பட்டியலை கேட்டு பெற்று வருகிறார். அத்துடன் சசிகலா மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் அவருக்குள்ள ஆதரவு; திருநெல்வேலி, அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து; நுால், பஞ்சு விலை உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்டவை குறித்து கட்சியினரிடம் கருத்து கேட்டு வருகிறார்.வரும், 26ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு பின், லோக்சபா தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வை தயார்படுத்தவும், நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், கிராமந்தோறும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதனால், ஜூன் முதல் வாரம், தென் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.