சேலம்:ஏற்காட்டில் வரும், 26ல் தொடங்க உள்ள கோடை விழாவை முன்னிட்டு சேலத்தில் இருந்து, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா, வரும், 26ல் தொடங்கி ஜூன், 1 வரை நடக்க உள்ளது. இதற்காக, ஏற்காடு விழாக்கோலம் பூண்டு வருகிறது.
கொரோனாவால் இரு ஆண்டுகள் கோடை விழா தடைபட்டதால், நடப்பாண்டு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலாப்பயணியர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 26 முதல், ஜூன், 1 வரை, சேலம், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஏற்காட்டுக்கு, 50 பஸ்களை இயக்க, சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வரும், 25 முதல் சிறப்பு பஸ்களின் இயக்கம் தொடங்கும். 26 முதல், பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, 50 பஸ்கள் வரை, சேலத்தில் இருந்து இயக்கப்படும். அத்துடன், ஏற்காட்டின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க, 'பேக்கேஜ்' கட்டணத்தில், சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஆலோசனை நடத்தப்படுகிறது' என்றனர்.