இடைப்பாடி:சங்ககிரி அருகே, கல்லுாரி பஸ்சும், தனியார் பஸ்சும் மோதியதில், மாணவ, மாணவியர் உள்பட, 34 பேர் காயம் அடைந்தனர்.
திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், 55 மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, கல்லுாரி பஸ், இடைப்பாடி நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. மேட்டூரை சேர்ந்த கார்த்திகேயன், 32, ஓட்டினார். அதேபோல், இடைப்பாடியில் இருந்து, தனியார் பஸ், 30 பயணியருடன், திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை, இடைப்பாடி, ஏரிச்சாலையை சேர்ந்த அருணாசலம், 42, ஓட்டினார்.
மாலை, 5:30 மணிக்கு, சங்ககிரி, கோழிப்பண்ணை அருகே, இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதியது. அதில், தனியார் பஸ் டிரைவர் அருணாசலம், அந்த பஸ்சில் வந்த, இடைப்பாடி, இருப்பாளியை சேர்ந்த சின்னகண்ணன், 60, படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதவிர படுகாயம் அடைந்த, 3 மாணவ, மாணவியர், 3 பயணியர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.மாணவ, மாணவியர், பயணியர் என, 15க்கும் மேற்பட்டோர், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். கல்லுாரி பஸ் டிரைவர் கார்த்திகேயன், மாணவ, மாணவியர், பயணியர் என, 11 பேர், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 34 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.