சேலம்:வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள கணவரை மீட்டுத்தரக்கோரி, அவரது மனைவி, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.சேலம், கருப்பூரை சேர்ந்தவர் நந்தினி, 29. இவர், 6 வயது மகன், 2 வயது மகளுடன், நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அங்கு, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். அப்போது, நந்தினி கூறியதாவது:சந்தோஷ், 33, என்பவருடன், 9 ஆண்டுக்கு முன் திருமணமானது. அவர், கூலி வேலைக்கு செல்கிறார். இரு குழந்தைகள் உள்ள நிலையில் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, வீட்டுக்கே வருவதில்லை. இதனால் குழந்தைகள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லை. கணவரை மீட்டு, எங்களுடன் வாழ வழி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.