வாழப்பாடி:மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஏமாற்றியதாக, பெண் அளித்த புகார்படி, போலீசார், மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூரை சேர்ந்த, நடராஜ் மகன் அஜித்குமார், 26. மத்திய தொழில் பாதுகாப்புப் படையில்(சி.ஐ.எஸ்.எப்.,) பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்த குழந்தையப்பன் மகள் கலைச்செல்வி, 27. இவருக்கு திருமணமாகி, கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசிக்கிறார்.
அவர் நேற்று வாழப்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், 'அஜித்குமார் என்னுடன் பல ஆண்டாக பழகி வருகிறார். ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டார்.தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு அஜித்குமாரும், அவரது தாய் அம்மாசியும், தகாத வார்த்தையில் திட்டி தாக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆபாசமாக பேசுதல், தாக்குதல், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.