தர்மபுரி;'தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'நீட்' முதுகலை மருத்துவ நுழைவு தேர்வு எழுத, தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தர்மபுரி, தி.மு.க.,-எம்.பி., செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது:தர்மபுரி லோக்சபா தொகுதியான, தர்மபுரி மாவட்டம், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு, 800, 900 கி.மீ., தொலைவிலுள்ள தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த ஒரு மாணவருக்கு, 900 கி.மீ., தொலைவிலுள்ள ஆந்திரா மாநிலம் தடபலீகுடும் என்ற இடத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாணியம்பாடியை சேர்ந்த, ஏழு மாத கர்ப்பிணிக்கு, 1,000 கி.மீ., தொலைவிலுள்ள தெலுங்கானாவின் அடிலாபாத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களுக்கு, அவர்களின் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை ஒதுக்குவதில் முரண்பாடுகள் உள்ளன. பயண நேரம், மொழி பிரச்னையால் மாணவர்கள், தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பல கி.மீ., துாரம் தள்ளி, மையங்கள் ஒதுக்கீடு செய்தது நியாயமற்றது. தமிழகத்தில், 31 நகரங்களில், 'நீட்' தேர்வு நடக்கவுள்ளது. எனவே, வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழகத்திலுள்ள மையங்களில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.