மதுரை:பிளஸ் 2 கணிதத் தேர்வில் சவாலான, குழப்பமான வினாக்கள் இடம் பெற்றதால் 'சென்டம் கனவு' மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மதுரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:
அதிக நேரம் தேவைப்பட்டது
பிரியதர்ஷினி, நாய்ஸ் மெட்ரிக் பள்ளி, நரிமேடு:மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட வினாக்களில், ஒரு மதிப்பெண் பகுதியில் எட்டும், ஐந்து மதிப்பெண் பகுதியில் இரண்டும் வழக்கமாக கேட்பதில் இருந்து மறைமுகமாக கேட்டு குழப்பும் வகையில் இடம் பெற்றன. சில வினாக்கள் இரண்டு மதிப்பெண்ணில் கேட்க வேண்டியதை ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்டதால் அதிக நேரம் செலவிட நேர்ந்தது.
'சென்டம்' கனவு தகர்ந்தது
கார்த்திகா, லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, கருப்பாயூரணிஇரண்டு மதிப்பெண் பகுதியில் கட்டாய வினா சவாலாக இருந்தது. மூன்று மதிப்பெண் பகுதியிலும் சில வினாக்கள் 'டுவிஸ்ட்' செய்து கேட்கப்பட்டது. 'சென்டம்' கனவுடன் தேர்வுக்கு தயாரானேன். ஆனால் ஒரு மதிப்பெண் பகுதியில் 6 வினாக்கள் குழப்பமாக அமைந்துவிட்டது. இதனால் 'சென்டம்' பெறுவது கடினம். ஐந்து மதிப்பெண் பகுதியிலும் ஒரு வினா குழப்பமாக இருந்தது.
நடுநிலையாக இருந்தது
சூரஜ், ஜாஸ் பப்ளிக் பள்ளி, மேலுார்நேரடியாக பொதுத் தேர்வை சந்திக்கிறோம். கொரோனாவால் மூன்று மாதங்கள் நேரடி வகுப்புகளை இழந்தோம். அந்த மனநிலைக்கு ஏற்ப கணிதத் தேர்வு அமையவில்லை. இரண்டு மதிப்பெண் கட்டாய வினா சவாலாக இருந்தாலும் மூன்று மதிப்பெண் பகுதியில் எளிதாக இருந்தது. தேர்ச்சி பெறுவதற்கான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. கடினம், எளிது என இல்லாமல் கணிதம் நடுநிலையாக இருந்தது.
எதிர்பார்த்த வினாக்கள் குறைவு
சுபிக் ஷா, லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, டி.கல்லுப்பட்டிஇத்தேர்வில் 75 சதவீதம் வினாக்கள் எளிதில் மதிப்பெண் பெறும் வகையில் இருந்தன. 15 சதவீதம் வினாக்கள் 'நிறுவுதல்' முறையில் கேட்கப்பட்டன. மீதமுள்ள வினாக்கள் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. ஒரு மதிப்பெண் பகுதியில் பல வினாக்கள் சவாலாக இருந்தன. எதிர்பார்த்த பாடங்களில் இருந்து குறைவான வினாக்களே வந்திருந்தன.ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்
ஆழமாக படித்தால் மதிப்பெண் அள்ளலாம்
தாரணி, ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.புளியங்குளம்கொரோனாவால் நேரடியாக பொது தேர்வை சந்திக்கும் மாணவர் மனநிலைக்கு மாறாக சவாலாக வினாக்கள் இருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் 8 வினாக்கள் 'கிரியேட்டிவ்' ஆகவும், பாடப்பகுதிக்குள்ளும் கேட்கப்பட்டுள்ளன. 2 மதிப்பெண் கட்டாய வினா ஆழமாக படித்திருந்தால் மட்டுமே தீர்வு காணும் வகையில் உள்ளது. 5 மதிப்பெண் வினா பகுதியில் இரண்டு வினாக்கள் யோசிக்கும் வகையில் அமைந்துள்ளது 'சென்டம்' குறைய வாய்ப்புள்ளது.
எளிமையும், சவாலும்
சிவகாமசுந்தரி, ஆசிரியை, அரசு மேல்நிலை பள்ளி, பாரப்பத்திஇத்தேர்வில் 60 சதவீதம் எளிமையாகவும், 40 சதவீதம் சவாலாகவும் வினாக்கள் வந்துள்ளன. ஐந்து மதிப்பெண் பகுதியில் 'அணிகள் அணிக் கோவைகள் பயன்பாடு' பாடத்தில் இருந்து 41ஏ வினா 'விதியை பயன்படுத்தி தீர்வு காண்க' என இதுவரை கேட்கப்பட்டது. ஆனால் தற்போது 'இந்த விதியை பயன்படுத்த இயலாது ஏன்' என குழப்பி கேட்கப்பட்டுள்ளது. இதுபோல் 'வெக்டர் சமன்பாடு மற்றும் கார்ட்டீசியன் சமன்பாடுகளை காண்க' என்ற 45ஏ வினாவில் 'மற்றும்' என்பதற்கு பதில் 'அல்லது' என்ற வார்த்தையால் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது.