மதுரை : சிறு, குறு, நடுத்தரத் தொழில் (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனங்களின் வரப்பிரசாதமான மத்திய அரசின் 'ட்ரெட்ஸ்' திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிரேடு ரிசீவபிள்ஸ் டிஸ்கவுன்ட் சிஸ்டம் (டிரெட்ஸ்) என்பது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான எலக்ட்ரானிக் நடைபாதையாக செயல்படுகிறது. ரூ.500 கோடிக்கு விற்று முதல் (சேல்ஸ் டர்ன்ஓவர்) செய்யும் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களிடம் பொருட்களை விற்பனை செய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரிசர்வ் வங்கி 2014ல் இதுகுறித்து கருத்துரு வெளியிட்டது. இதுகுறித்த கருத்து கேட்பின் அடிப்படையில் 'ட்ரெட்ஸ்' நடைபாதை உருவாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதல் அனுமதி பெற்ற ரிசீவபிள்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியாவின் (ஆர்.எக்ஸ்.ஐ.எல்.) முதல் வெளியீடாக 'ட்ரெட்ஸ் 'பரிமாற்ற திட்டம் செயல்படுகிறது. இத்தளத்தில் பல்வேறு வங்கிகள் இணைந்துள்ளன.பெரிய நிறுவனங்களுக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்தால் அதன் மதிப்பில் 90 சதவீதத்தை வங்கிகள் வழங்க முன்வரும்.
இதற்கு முன்பு வரை எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பெரு நிறுவனங்களிடம் பொருட்களை விற்பனை செய்யும் போது அந்த தொகைக்கான கடனை வங்கிகளில் பெற வேண்டுமெனில் சொத்து அடமானம் வைக்க வேண்டும். அதிலும் வங்கிகளின் விருப்பத்திற்கேற்ப தொகையும், வட்டியும் பரிசீலிக்கப்படும்.'டிரெட்ஸ்' திட்டத்தில் நிறைய வங்கிகள் இந்த எலக்ட்ரானிக் நடைபாதையில் இணைந்துள்ளன.
எந்த வங்கியில் வட்டி குறைவாக தருகின்றனர் என எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் கேட்டு அதற்கேற்ப கடன்பெறும் வசதியும் உள்ளன. கடன் பெற்ற பின் வங்கிக்கும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கும் தொடர்பிருக்காது. அதற்கான தொகையை பெருநிறுவனங்களிடம் வங்கிகள் வசூலிக்கும். இந்த புதிய நடைமுறை தமிழகத்தில் அந்தந்த மாவட்ட தொழில்மையங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.