பண்ருட்டி : பண்ருட்டியில், ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றியவர்களுக்கு மாற்று இடம் கோரி, உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி நகராட்சி, 26வது வார்டில் வருவாய்த் துறைக்கு சொந்தமான களத்துமேடு ஏரி 10 ஏக்கர் பரப்பில் உள்ளது. ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த177 வீடுகளை கடந்த ஏப்., 25ம் தேதி நகராட்சி, வருவாய்த்துறையினர் அகற்றினர்.இதில் பாதித்தவர்களுக்கு மாற்று இடம் கேட்டு, அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை அப்பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
அவர்களிடம் பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தாசில்தார் கார்த்திகேயன், நகராட்சி கமிஷ்னர் மகேஸ்வரி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.பின், இரவு 7:00 மணியளவில் ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது.
இதனிடையே உண்ணாவிரதம் இருந்த ராதா,35; அமலா,35, ஆகியோர் மயக்கமடைந்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து உண்ணாவிரம் நடந்து வருகிறது.