தாம்பரம்,:தாம்பரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 8.16 கோடி ரூபாய் கடை வாடகை பாக்கியை வசூலிக்கும் பணி, துவங்கியது. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால், ஒரே நாளில், 1.16 கோடி ரூபாய் வசூலானது. மீதமுள்ள தொகையை வசூலிக்கும் நடவடிக்கை தொடரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவகாசம்
இதையடுத்து, நேற்று காலை, தாம்பரம் மாநகராட்சியின் வருவாய் பிரிவு அதிகாரிகள் தலைமையில், கடைகளில் வாடகை வசூலிக்கவும், வாடகை தர மறுக்கும் கடைகளுக்கு சீல் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.பாதுகாப்பிற்காக, தாம்பரம் மற்றும் அதன் அருகில் உள்ள, காவல் நிலையங்களில் இருந்து, போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டனர். வாடகை கொடுக்காத கடைகளின், மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரிய அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுஇருந்தனர்.நேற்று காலை 9:00 மணிக்கு வாடகை வசூலிக்க சென்ற அதிகாரிகளுடன், வியாபாரிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், 10:00 மணி வரை, வியாபாரிகள் தரப்பில் வாடகை செலுத்த அவகாசம் கோரப்பட்டது.
காசோலை
அதனால், ஐந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு மேல், வியாபாரிகள் ஒவ்வொருவராக, மாநகராட்சியின் வங்கி கணக்கு பெயரில் காசோலை கொடுத்தனர்.ஒட்டுமொத்தமாக, 1.16 கோடி ரூபாய் வரை, வாடகை பாக்கி, நேற்று, ஒரே நாளில் வசூலானது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கமிட்டி அமைத்து, வியாபாரிகளுடன் ஆலோசிக்க நோட்டீஸ் வழங்கினோம். ஆனால், ஒருவர் கூட வராததால், அவர்களுக்கு வாடகை உயர்வு பற்றிவிபரம் தெரியவில்லை.தற்போது, 1.16 கோடி ரூபாய் வரையிலான, காசோலை பெறப்பட்டுள்ளது; மீதி தொகையை, ஒரு மாதத்திற்குள் செலுத்துவதாக வியாபாரிகள் உறுதியளித்துள்ளனர்.ஒரு மாதத்திற்குள் செலுத்தாதவர்களின், கடைகள் கண்டிப்பாக சீல் வைக்கப்படும். தற்போது, கொடுக்கப்பட்டுள்ள காசோலைகளில், பணமின்றி திரும்பி வந்தால், அவற்றை கொடுத்தவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கையும் பாயும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.