செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட உதயம்பாக்கம் கிராமத்தில், பாலாறு அருகில், அரிசி ஆலை ஒன்று செயல்படுகிறது.
இந்த ஆலையிலிருந்து, கிலோ கணக்கில் வெளியேற்றப்படும் கரித்துாள், டிராக்டர் மூலம் எடுத்து சென்று, பாலாற்றில் கொட்டப்படுகிறது.இதனால், பாலாற்றின் ஒரு பகுதி முழுதும், அரிசி ஆலை கழிவு கரித்துாள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குழாய் வழியாக பாலாற்றில் விடப்படுகிறது.
மழைக்காலத்தில் தண்ணீரில் கலப்பதால் குடிநீரும், ஆற்று மணலும் மாசடைகிறது. இதே நிலை நீடித்தால், இப்பகுதியில் பாலாறு முழுதும் கரித்துாள்களாகவே காட்சியளிக்கும். மாவட்ட நிர்வாகம், இப்பகுதியை ஆய்வு செய்து, அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கரித்துாள் மற்றும் கழிவு நீர், ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.