திருபுவனை:திருபுவனை அருகே தனியார் அப்பார்ட்மென்ட் செப்டிக் டேங்கில் பிளம்பர் தவறி விழுந்து இறந்தார். அப்பார்ட்மென்ட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (57); பிளம்பர். இவருக்கு ரமா என்ற மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். திருவாண்டார்கோயில் இந்திரா நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.திருபுவனை பஸ் நிறுத்தம் அருகே, பண்ருட்டியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு சொந்தமான 3 மாடிகளை கொண்ட அப்பார்ட்மெண்ட் உள்ளது.
இந்த அப்பார்ட்மெண்ட்டில் 11 அடி ஆழம் உள்ள செப்டிக் டேங்க் சீரமைக்கும் பணியில் ரமேஷ் நேற்று ஈடுபட்டார்எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்க் உள்ளே விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.திருபுவனை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று உடலை மீட்டனர். இந்திரா நகர் மக்கள் உடலை ஆம்புலன்ஸ்சில் ஏற்றிச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய பாதுகாப்பு வசதி செய்து தராமல் ரமேஷ் சாவுக்கு காரணமான அப்பார்ட்மெண்ட் உரிமையாளர், வேலைக்கு அழைத்துச் சென்ற ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.திருபுவனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு உடலை ஆம்புலன்சில் ஏற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.