திண்டிவனம், 'தினமலர்' செய்தி எதிரொலியால், திண்டிவனத்தில் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த டாஸ்மாக் பார் கொட்டகை அகற்றப்பட்டது.திண்டிவனம் காந்தி சிலை அருகே திருவள்ளுவர் வீதியில் (கோணிக் கடை சந்து) டாஸ்மாக் கடை அரசின் விதிகளை மீறி, தேசிய மேல்நிலைப் பள்ளிக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை.இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடையில் பார் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, டாஸ்மாக் கடைக்கு எதிரே சற்று துாரத்தில் சாலையை ஆக்கிரமித்து கொட்டகை போட்டு சில நாட்களாக பார் நடைபெற்று வந்தது.இதுகுறித்து கடந்த 17ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் கலால் தாசில்தார் புஷ்பவதி நேரில் சென்று விசாரணை நடத்தி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பார் உரிமையாளரிடம், சாலையை ஆக்கிரமித்துள்ள பார் கொட்டகையை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.அதன்படி சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த பார் கொட்டகை நேற்று அகற்றப்பட்டது.