புதுச்சேரி:'புதுச்சேரியை குப்பை இல்லா மாநிலமாக மாற்றும் வகையில் விஞ்ஞானபூர்வமாக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என கவர்னர் தமிழிசை கூறினார்.
லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் புத்தாக்க மையத்தை திறந்து வைத்து, கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது;குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானம், ஆராய்ச்சிக்கு இங்கே வழிவகை செய்யப்பட்டு உள்ளது.பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல் கலாம் அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது.
இது, வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதன் மூலம், எந்தப் பள்ளியில் படிக்கும் எந்த குழந்தையும் எத்தகைய ஆராய்ச்சி வேண்டுமானாலும் செய்யலாம். இது, புதுச்சேரி அரசும் மத்திய கலாசார அமைச்சகமும் இணைந்து செய்யும் புதிய முயற்சி.மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு எவ்வளவு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும் என்பதற்கும், மக்கள் எவ்வளவு பலம் பெறுவார்கள் என்பதற்கும் இந்த கண்காட்சியும், ஆராய்ச்சி மையமும் உதாரணம்.
அப்துல் கலாம், வாழத் தகுந்த பூமியாக, முழுமையாக மறுசுழற்சிக்கு சாத்தியமுள்ள பூமியாக இது இருக்கவேண்டும் என்று கூறினார். குப்பைகளை அகற்ற ரோபோ கண்டுபிடித்து உள்ளனர். புதுச்சேரியை, குப்பை இல்லா மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பை இல்லாத புதுச்சேரியாக மாற்றும் வகையில் விஞ்ஞான பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனை இங்கு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பேரறிவாளன் விடுதலை குறித்த கேள்விக்கு, 'இது உச்சநீதிமன்றத்தில் இருந்து வந்த தீர்ப்பு. கருத்து ஏதும் இல்லை' என்றார்.