மதுரை: ''மதுரை வேளாண் கல்லுாரி நுண்ணுயிரியல் துறையின் சார்பில் பயிர்களுக்கு நன்மை செய்யும் 'மைகோரைசா' உட்பூஞ்சாண ஆய்வக பரிசோதனை முடிந்துள்ள நிலையில் விரைவில் பவுடர் வடிவில் பயன்பாட்டுக்கு வரும்'' என துறைத்தலைவி குமுதா தெரிவித்தார். அவர் கூறியதாவது: மைகோரைசா பூஞ்சாணத்தை மக்காச்சோள வேர்களில் வளரவிட்டு உருவாக்குவதால் மண் போன்று இருக்கும். வேரும் கலந்திருக்கும். தற்போதுள்ள நிலையில் நாற்றங்கால் பயிர்கள், பைகளில் வளரும் செடிகளுக்கு பயன்படுத்தலாம். கிலோ ரூ.60 என்பதால் நேரடியாக வயலில் இடும் போது ஏக்கருக்கு 50 கிலோ தேவைப்படுவதால் அதிக செலவாகும்.துறையின் சார்பில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், அசெட்டோ பாக்டர், சிலிகா பாக்டீரியா, துத்தநாக பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, வேர் உட்பூசணம், அசோலா உற்பத்தி செய்கிறோம். அசோஸ்பைரில்லம் ஒரு கிராம் அளவில் ஒரு மில்லியன் பாக்டீரியா இருக்கும். நேரடி விதைப்புக்கு 2 பாக்கெட், வயலில் துாவ 2 கிலோ போதும்.ஆய்வகத்துக்கு வெளியே மக்காச்சோள வேர்களில் வளர்ப்பதால் ஒரு கிராம் 5 - 6 வித்துகளே உள்ளன. வேர்களில் வளரும் போது 60 நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஆய்வகத்தில் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கி வருகிறோம். ஒரு கிராம் பவுடரில் 1000 வித்துகள் இருக்கும் அளவுக்கு தயாரித்து பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது. உற்பத்திக்கான ஆய்வகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எக்டேருக்கு 50 கிராம் அளவு மட்டும் பயன்படுத்தும் வகையில் அடுத்தாண்டு முதல் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்றார்.