கோவை: வ.உ.சி., மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை ஓவிய கண்காட்சியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார். ஓவியக்கண்காட்சியில் உள்ள படங்களை பற்றி, கலெக்டர் சமீரன் விளக்கினார்.
இக்கண்காட்சியில், தொல்லியல் துறை சார்பில் கீழடி (வைகை நதிக்கரையில் நகர நாகரிகம்), பொருநை (ஆற்றங்கரை நாகரிகம்), கொடுமணல் (சங்க கால தொழிற்கூடம்), மயிலாடும்பாறை (4,200 ஆண்டுகள் பழமையான இரும்பு கால பண்பாடு) ஆகிய தொல்பொருட்கள் கண்காட்சியும், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியும் 10,000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை, 25ம் தேதி வரை, 7 நாட்கள் தினமும் காலை, 10.00 முதல் இரவு, 9.00 மணி வரை பார்வையிடலாம். தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள நெல்மணிகளின் காலம் கி.மு., 1155 என, கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தண் பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் உள்ளது.
தொன்மையான சமூகத்தின் நாகரிகத்தினை பறைசாற்றும் அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புகளை காண பொதுமக்கள், தமிழ்பற்றாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, சாமிநாதன், கயல்விழி, அன்பரசன், மேயர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்த போது எடுத்த படம் ஓவியமாக இடம் பெற்றிருந்தது. அதை கவனித்த முதல்வர், அமைச்சர் தங்கம் தென்னரசுவை அழைத்து காண்பித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டுச் சென்றபின், காலை, 9:50 மணியளவில், அவரது மனைவி துர்கா, கண்காட்சி் அரங்கிற்கு வந்தார். மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா ஆகியோர் ஓவிய படங்களை பற்றி விளக்கினார். தனது மகன் உதயநிதி உள்ள படங்களை் கூர்ந்து கவனித்தார்.