சென்னை : கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கில், பள்ளி சிறார்களுக்கான கோடை கால அறிவியல் முகாம், நேற்று துவங்கியது.
சென்னை, கோட்டூர்புரத்தில் பிர்லா கோளரங்கம் எனப்படும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல்படுகிறது. இதன் சார்பில் ஆண்டுதோறும், பள்ளி சிறார்களுக்கான கோடை கால அறிவியல் முகாம் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டிற்கான முகாம், நேற்று துவங்கியது. இந்த முகாமில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவ -- மாணவியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
அறிவியலுக்கான மூன்று நாள் முகாமில் இயற்பியல், வேதியல், கணிதம், வான் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறித்த ருசிகர தகவல்கள் விளக்கப்படுகின்றன. இதற்கான கட்டணமாக, 1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும், 24ம் தேதி சூரிய கடிகாரம் குறித்த தகவல்கள், செயல்முறை விளக்கத்துடன் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இதற்கான கட்டணமாக, 750 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு, செயற்கை நுண்ணறிவு முகாம், 27,28ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான கட்டணமாக, 1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும், 30ம் தேதி முப்பரிமாண அச்சு குறித்த முகாம், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்படுகிறது. இதற்கான, கட்டணமாக, 750 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்த முகாம்கள், காலை10:00 மணி முதல் மாலை 4:30 மணிவரை நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.