சென்னையில் வீடு, கடை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்போருக்கு, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்க வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திட்ட அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நேரடியாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதி வழங்குவதில், கவுன்சிலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரம்
வசூல்
சென்னை மாநகராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள கவுன்சிலர்கள் சிலர், கட்டட உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனத்தினரை மட்டுமின்றி, அதிகாரிகளையும் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. கட்டுமான திட்ட அனுமதி வழங்க, சதுர அடி கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, புதிதாக வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி கோருபவர்கள், திட்ட விபரம், வரைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்போது, அவற்றை பரிசீலித்து, 30 நாட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டுஉள்ளது. ஏதேனும் குறைபாடுகள், ஆட்சேபனை இருந்தால், நிராகரிப்புக்கான உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல், 30 நாட்களுக்குள் மண்டல அளவில் திட்ட அனுமதி கிடைக்காத பட்சத்தில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மேயர், துணை மேயர், கமிஷனர், துணை கமிஷனர்களிடம் நேரடியாக புகார் மனு அளிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.30 நாட்களில் நடவடிக்கை
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:விதிமீறல் கட்டடம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தப்படுகிறது. திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பங்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை மீறி, திட்ட அனுமதி குறித்த விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேரடியாக புகார் அளிக்கலாம். புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்வாதிகள் தலையீடு இருந்தால், அது உரிய வகையில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -