மதுரை, மதுரை மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசின் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் சார்பில் 62 நல வாழ்வு மையங்கள் அமையும் நிலையில் மூன்று நவீன மருத்துவ ஆய்வகங்களும் அமைகின்றன.மதுரை மாநகராட்சியில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையத்திற்கு கீழே தலா ரூ.25 லட்சம் மதிப்பில் இரண்டு நல வாழ்வு மையங்கள் வீதம் 62 அமைகிறது. இதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.இம்மையங்களில் காய்ச்சல், சளி உள்ளிட்ட சாதாரண பிரச்னைகளுக்கு வெளி நோயாளிகளாக மக்கள் சிகிச்சை பெறலாம்.இந்நிலையில் அன்சாரி நகர், திருநகர், சாத்தமங்கலத்தில் நவீன மருத்துவ ஆய்வகங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதிக்க முடியாத தைராய்டு உள்ளிட்ட உயர் பரிசோதனைகளை ஆய்வகங்களில் செய்யலாம். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வருவோர் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை ஆய்வகம் செல்லும் நேரம் மிச்சமாகும். சிகிச்சையும் விரைந்து அளித்து, குணமாக்க முடியும் என மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.