பந்தலுார்:கூடலுார் வனக்கோட்டத்தில், யானை-மனித மோதல்களை தடுக்கும், யானை கண்காணிப்பு குழுவினர் மற்றும் அதிவிரைவு பாதுகாப்பு படை வன குழுவினருக்கு சம்பளம் வழங்காததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கூடலுார் வன கோட்டத்துக்கு உட்பட்ட தேவாலா மற்றும் சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 30க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.அதில், ஒரு ஆண் யானை மற்றும் ஒரு மக்னா யானை பகல் நேரங்களிலும் சாலைகளில் உலா வருகிறது. மேலும், பிற யானைகள் சாலை மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.
இதனால், யானை-மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த யானைகளை கண்காணிக்கவும், மக்களுக்கான பாதுகாப்பு பணியிலும், இரவு;பகல் என, 24 மணி நேரமும், வன துறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் யானை கண்காணிப்பு குழுவினர் மற்றும் அதிவிரைவு பாதுகாப்பு படை வன குழுவினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளமாக வழங்கும் நிலையில், கடந்த 7 மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணியாற்றும் சூழலில் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து வனத்துறை அமைச்சரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், தீர்வு கிடைக்கவில்லை.
இதனால், தினசரி குடும்ப செலவுகளை கவனிக்க, வட்டிக்காரர்களிடம் கையேந்தும் அவலத்தில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.எனவே, இவர்களுக்கான நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்கவும், மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.