குன்னுார்:'சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பங்களை, 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,' என, தேயிலை வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
குன்னுாரில் உள்ள தேயிலை வாரிய செயல் இயக்குனர் (பொ) பல்கன்ட் பேனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை :தேயிலை வாரியம் சார்பில் நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் ஜூன் வரை முதல் காலாண்டில், சிறு தேயிலை விவசாயிகளுக்கான நல திட்டங்களை அறிமுகப் படுத்த உள்ளது.இந்த திட்டங்கள், 5 ஏக்கர் வரை தேயிலை சாகுபடி செய்யும் சிறு தேயிலை விவசாயிகளின் தோட்ட அபிவிருத்து மற்றும் மனித வள மேம்பாட்டுக்காக ஏற்படுப்பட்டுள்ளது.
இதன் மூலம், புரூனிங் இயந்திரம், தேயிலை அறுவடை இயந்திரம், தேயிலை அறுவடை கத்திரி போன்றவற்றிற்கு, மொத்த விலையில், 25 சதவீத வரம்புடன் மானியம் பெறலாம்.
மனிதவள மேம்பாட்டு திட்டத்தில், 1ம் வகுப்பு முதல் முதுகலை இறுதியாண்டு வரை கடந்த கல்வியாண்டில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தகுதியான கல்வி உதவி தொகை. பதிவு செய்த சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் வார நாட்களில் தேயிலை வாரிய கள அலுவலங்களில் பெற்று, 31ம் தேதிக்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பல்கன்ட் பேனர்ஜி கூறியுள்ளார்.